பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாரின் வேண்டுகோளை ஏற்று மதுரைக்கு வந்த சம்பந்தர், சமண மதத்தினரோடு அனல் வாதத்தில் போட்டியிட்டு வென்றார். அவர்கள் புனல் வாதத்திற்கு அழைத்தனர். வைகையில் இட்ட சமண நூல் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. சமணர் வாதத்தில் தோற்க, சம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என்னும் பதிகம் எழுதி அதை வைகையில் இட்டார். ஏடு ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்துச் சென்று கரை ஒதுங்கியது. ஏடு கரையேறிய இடமே 'ஏடகம்' என்று அழைக்கப்பட்டது. ஆற்றின் கரையோரம் கோயில் உள்ளது.
மூலவர் 'ஏடகநாதர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். சுவாமியைப் போலவே அம்பிகையும் சிறிய வடிவில் 'ஏலவார் குழலி' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றார். மற்றொரு அம்பாள் 'சுகந்த குந்தளாம்பிகை' என்ற திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றார். தினசரி 7 கால பூஜைகள் நடைபெறுவது விஷேசம்.
சுவாமியும், அம்பிகையும் அருகருகே தனித்தனி சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர். இது கல்யாணக் கோலம் ஆகும். எனவே திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதை வீட்டிற்கு எடுத்து வந்து 41 நாட்கள் பூஜையறையில் வைத்து பூஜை செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் தனித்தனி இராஜகோபுரங்கள் உள்ளன. இக்கோயிலில் சூரியன் தனது இரு மனைவிகளான சாயா மற்றும் சமிக்ஞையுடனும், சந்திரன் தனது இரு மனைவிகளான கிருத்திகை மற்றும் ரோகினியுடனும் காட்சி தருவது சிறப்பாகும். இங்கு உள்ள கால பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. பிரகாரத்தில் சப்தமாதர்கள் உள்ளனர். அதில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
திருமால், ஆதிசேஷன், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம். ஆதிசேஷன் வழிபட்டதால் 'சேடனூர்' என்னும் அழைக்கப்பட்டது.
ஆவணி மாதம் பௌர்ணமியன்று ஏடு ஏறிய திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது சுவாமியும், அம்பிகையும், சம்பந்தரும் அருகில் உள்ள வைகையாற்றுக்கு எழுந்தருளுவார்கள்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியள்ளார். கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |